மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை காக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்- சீமான்

மியான்மரில்  தமிழர்கள் சிக்கி தவிக்கும் நிலையில் உடனடியாக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பிரச்சனையில் தமிழக அரசை நம்பித்தான் இருக்க வேண்டியுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில்: தற்போதைய திமுக அரசின் செயல்பாடு எல்லா விஷயங்களிலும் மத்திய பாஜக அரசோடு ஒன்றிணைந்து செயல்படுவது போல் உள்ளது, நாங்கள் ஒரு சாதாரண கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் கொடுக்க மறுக்கும் இந்த அரசு. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பெரிய அளவில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது.

எங்களது நிலைப்பாடு என்றுமே தனித்து தேர்தலில் போட்டியிடுவது தான், எங்களுக்கு தேவை தற்காலிக தீர்வு அல்ல நிரந்தர தீர்வு அதை நோக்கித்தான் முன்னோக்கி செல்கிறோம், தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அமைப்புகள் தற்போது எங்களோடு இணைந்து தான் செயல்படுகின்றனர், அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டு லஞ்ச லாவண்யத்திற்கு இடமில்லாத அமைப்புகள் எங்களோடு இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை, ஆ.ராசா பேசிய கருத்து தவறு இல்லாத பட்சத்தில் அவருக்காக திமுக தரப்பிலிருந்து யாரும் குரல் கொடுக்காத நிலையில் நான் மட்டும்தான் குரல் கொடுத்தேன், பெரியார் என்ற சொல் அரசியலில் பெரிய தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தி விடாது பெரியார் பேரை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை என்று அவர்தெரிவித்தார்.