மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

திருமயம் அருகிலுள்ள மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில், பள்ளி முதல்வர்  சலஜாகுமாரி முன்னிலையில் ஆசிரிய, ஆசிரியைகள் புடைசூழ மாணவ, மாணவிகளின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் விழா துவங்கியது.

விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் இறைவாழ்த்து, இறைஜெபம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பள்ளி தலைவர் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளே எதிர்கால இந்தியாக்கள் என்ற உண்மையை உணராமல் இந்தக் கால குழந்தைகள் தகவல் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி இருக்கும் நிலையை அகற்றி சமுதாயத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதை மையகருவாக கொண்டு நடனம், பாடல், நகைச்சுவை நாடகம், ஊமை நாடகம், சிலம்பபாட்டம், ஆசிரிய, ஆசிரியைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மாணவ, மாணவிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.

விழாவில் பள்ளி இணைத்தலைவர் மாணவர்கள் தெளிந்த சிந்தனையோடு, கற்பதை ஆழமாக கற்று, சாதனை ஒன்றை நோக்கமாக கொண்டு, இலக்கு நோக்கி நேர்கொண்ட பாதையில் பயணிக்க வேண்டும். நன்மை தீமை என்ற இரண்டு பக்கங்கள் கொண்ட வாழ்க்கையில் நன்மையை பற்றிக் கொண்டு, தீமையில் இருந்து விலகிநடக்க வேண்டும் என்று பேசினார்.

ஆசிரிய, ஆசிரியைகளின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்வாக இருந்தது என்று கூறி, பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.