
புதுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து புதுகை மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிபட்டி காவல் சரகம் தெம்மாவூர் கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சைவம் மகன் வீரமணி (22) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி 18 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் வீரமணி மீது கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாலிபர் வீரமணி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இன்று புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் வாலிபர் வீரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும், அபராதத் தொகையை கட்ட தவறினால், மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராத தொகையை இழப்பீட்டு தொகையாக வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக யோகமலர் ஆஜரானார். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் நீதிமன்ற பணிக்கான முதல்நிலை காவலர் சீதாலெட்சுமிஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எஸ்.பி., வந்திதாபாண்டே பாராட்டினார்.
தீர்ப்புக்குப் பின் வாலிபர் வீரமணியை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.