மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்று கொண்டார்.

மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி காலமானார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 14ம் தேதி மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய ஆதீனம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த புதிய ஆதீனம் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள அனைத்து தருமபுரம் ஆதீனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மறைந்த 292வது ஆதீனத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று குருபூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு, தருமபுர ஆதீன மடத்தின் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது.

இதில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிக்கு பட்டம் சூட்டினார்.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு, இளைய சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை அருணகிரிநாதர் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.