பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று (ஜன.12) முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உட்பட 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 651 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 1,508 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இப்பேருந்துகளில் சென்னையில் இருந்து செல்ல 14,500 பேரும்,மற்ற பகுதிகளில் 21 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஜன.12, 13, 14-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள இதுவரை சுமார் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம்மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் 12 முன்பதிவு மையங்கள் ஜன.14 வரை செயல்படும்.
பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள 9445014450, 9445014436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800-425-6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு மையமும், முக்கிய பேருந்துநிலையங்களில் 20 தகவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.