
ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில்,” பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, அதில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டிய பிறகு கொண்டாடும் விழாவில், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அன்றோ! ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது. என்றும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான – தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும் வேலைவாய்ப்பையும் பெருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வீட்டிலும் நாட்டிலும் வளர்ச்சியும், அதனால் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது. சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம். ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. 3நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடவே மக்கள் விரும்புவதால் வேலை மற்றும் தொழில் ரீதியாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டனர். சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கின்ற வசதி உள்ளது. இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. 3 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பயணிகள் கூறுகையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு ஊருக்கு செல்வதற்கு அரசு சிறப்பான முறையில் பேருந்துகளை ஏற்படுத்தி தந்துள்ளது என்று தெரிவித்தார். தனியார் பேருந்துகளில் சிலர் கூடுதலாக கட்டணங்கள் வசூலிப்பதாகவும் ஆங்காங்கே சில புகார்களை பயணிகள் தெரிவித்தனர். தனியார் பேருந்து கட்டணத்தை நியாயமான முறையில் கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என பயணிகள் தெரிவித்தனர்.