பெகாசஸ் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!!

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு உரிய விளக்கம் தரக் கோரி ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள தேவையான, நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழுவை அமைக்க தயாராக இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ரிட் மனுக்கள் மீது 2 அல்லது 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.