புதுமைப் பெண் திட்டம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை ராயபுரம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்றார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு ‘புதுமைப்பெண் திட்டம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. கல்வி உதவி தொகை பெற சுமார் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.698 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.இந்த நிலையில் மாதம் ரூ.1000 கல்வி உதவி தொகை வழங்கும் புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி(இன்று) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.