புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இழை ஓடுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இழை ஓடுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியான மண் பரிசோதனை சாயல் டெஸ்ட் எடுக்கும் பணி இன்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், கபடி, நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் பலர் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை தட்டிச்சென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். தங்களின் பயிற்சிக்காக மாவட்ட விளையாட்டு அரங்கத்தை முழுமையாகவும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மேலும் பல்வேறு நவீன அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கவும் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கவும் ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் அப்பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட அமைச்சரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான மெய்யநாதன் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதற்கான பணிகள் தொடங்கும் வகையில் பெரியதொரு பொருட்செலவில் திட்டம் தொடங்கப்பட உள்ளதால் எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு திட்டத்தின் நோக்கம் விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான பயனை கொடுக்கும் வகையில் விளையாட்டு மைதானத்தில் ஓடுதளம் அமைய இருக்கும் பகுதியில் நான்கு பகுதிகளும் மண் பரிசோதனை என்று சொல்லப்படக்கூடிய சாயல் டெஸ்ட் எடுக்கும் பணி இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இங்கு எடுக்கப்படக்கூடிய மண்ணானது திருச்சியில் இருக்கும் அறிவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து வல்லுனர்களின் அறிவுரைக்கு ஏற்ப பணிகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம் வந்தால் விளையாட்டு வீரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கும் சூழலில் இத்தகைய இழை ஓடுதளம் அமைக்கப்பட்ட பின்னராவது விளையாட்டு வீரர்கள் ஆண்டு முழுவதும் தங்களது பயிற்சியினை மேற்கொள்ள இந்த விளையாட்டு அரங்கம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது புதுகை வரலாறின் எதிர்பார்ப்பு.