புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் தீண்டாமை வழக்குகள் – மங்களநாடு கிராமத்தில்  டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்தில்  உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்துவதாக மங்களநாடுகிராம நிர்வாக அலுவலர்  பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மங்களநாடு கிராமத்தில்  டீக்கடை நடத்தி வரும் வெங்கடாசலம், அருள்ராஜ் ஆகிய இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த வாரம் பட்டியலின மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கலாம் என்று வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டு இருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டிருந்த வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு பகுதியை சேர்ந்த பட்டியல் இன மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினருக்கு விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மங்களநாடு கிராம பகுதியில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளைமுறை பயன்படுத்துவதாக நாகுடி காவல் நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமை  தடை சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாகுடி போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு டீக்கடை நடத்தி வந்த வெங்கடாசலம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

அறந்தாங்கி பகுதியில் நேற்றைய தினம் கூத்தங்குடி பகுதியில் பட்டியலின மக்கள் குளத்தில் குளிக்க சென்ற போது அவர்களைதாக்க முயற்சி செய்து இழிவாக பேசியதாக நாகுடி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.நேற்று இரண்டாவது நாளாக அதே காவல் நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.