புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு 82.16 மி.மீ., கூடுதல் மழை! நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ., ஆகும். 2022ம் ஆண்டு நவம்பர் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 706.50 மி.மீ.,க்கு பதிலாக 783.66 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 82.16 மி.மீ., கூடுதலாக பதிவாகியுள்ளது.

பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023ம் ஆண்டில் செப்டம்பர் முடிய நெல் 79812 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1510 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 919 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 5606 எக்டர் பரப்பிலும், கரும்பு 1907 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 44 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12421 எக்டர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 167.353 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 55.248 மெ.டன் பயறு விதைகளும், 24.631 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.131 மெ.டன் சிறுதானிய விதைகளும், 6.121 மெ.டன் எள் விதைகளும், 1.245 மெ.டன் பசுந்தாள் உரவிதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3416 மெ.டன்னும், டி.ஏ.பி., 1,006 மெ.டன்னும், பொட்டாஷ் 927 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5,117 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 297 மெ.டன் யூரியா, 203 மெ.டன் டி.ஏ.பி., 367 மெ.டன் பொட்டாஷ், 255 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கு 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 72 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2022-23ம் ஆண்டில் இதுவரை 1,593 பயனாளிகளுக்கு 1827 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4 கோடியே, 67 லட்சம் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி – வைகை -குண்டாறு) ரம்யாதேவி,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.