புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் 6150 எக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 எக்டரிலும்,  மணமேல்குடி வட்டாரத்தில் 8200 எக்டரிலும்,  அரிமளம் வட்டாரத்தில் 3750 எக்டரிலும், நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது.

2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (FNS-Rice), நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், எக்டருக்கு ரூ.7500/- மானியத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில், 30 எக்டரில் அமைக்க, ரூ.2.25 லட்சம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 30 எக்டரில் அமைக்க ரூ.2.25 லட்சம், மணமேல்குடி வட்டாரத்தில், 30 எக்டரில் அமைக்க ரூ.2.25 லட்சம் மற்றும் அரிமளம் வட்டாரத்தில், 10 எக்டரில் அமைக்க ரூ.0.75 லட்சமும், மானிய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி வட்டாரத்தில், ஆயிங்குடி, களக்காடு மற்றும் தாந்தாணி பகுதிகளிலும், ஆவுடையர்கோவில் வட்டாரத்தில், பாண்டிபத்திரம் பகுதியிலும்,  மணமேல்குடி வட்டாரத்தில் விச்சூர், கானாடு மற்றும் கம்பர்கோவில் பகுதிகளிலும், அரிமளம் வட்டாரத்தில் இரும்பாநாடு மற்றும் குருங்களூர் பகுதிகளிலும், நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  பெரும்பாலான செயல் விளக்கங்கள் யாவும், புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் அமலாக்கம் செய்யப்படும் கிராமங்களில், செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செயல் விளக்கங்கள் அமைக்கத் தேவையான நேரடி நெல் விதைப்புக்குரிய நெல் விதைகள், வரப்புப் பயிராக விதைப்பு செய்யக்கூடிய உளுந்து விதைகள், நெல் விதைகளுக்கு, விதை நேர்த்தி செய்து விதைக்கப் பயன்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா மற்றும் நெல் விதைப்பு செய்தவுடன் மேலாக இடக்கூடிய நெல் நுண்சத்து முதலிய இடுபொருட்கள் அந்தந்த வட்டாரங்களில், தொகுப்பு செயல் விளக்கங்களை செயலாக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

தொகுப்பு செயல் விளக்கங்களுக்கான இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்  மெ. சக்திவேல், துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) திரு. வி.எம். ரவிச்சந்திரன், செயல் விளக்க விவசாயிகளுக்கு வழங்கினார்கள். மணமேல்குடி வட்டாரத்தில், விச்சூர் கிராமத்தில் இயந்திரக் கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு பணிகள் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.  ஆவுடையார்கோவில்  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி,  உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் என்.சர்புதீன், தொழில் நுட்ப அலுவலர்கள் சி. கார்த்திக் மற்றும் பா. சரண்யா, வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கெண்டனர்.