புதுக்கோட்டை மன்னரின் புகழுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கும் மாவட்ட நிர்வாகம் மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் விழா குழுவினர் குற்றச்சாட்டு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றுபட்ட இந்தியாவே நாட்டை வல்லரசாக்கும் என்ற உயர்ந்த உயரிய குறிக்கோளுடன் தன்னுடைய அத்துணை சாம்ராஜ்யத்தையும் இந்திய தேசத்திற்காக விட்டுக் கொடுத்து மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்கி உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்பாள்தாஸ் ஆர்.ராஜகோபால தொண்டைமானின் புகழைக் கெடுக்கும் சதி செயல் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் தான் ஆர்.ராஜகோபால தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. 1930 ஆம் ஆண்டு அங்கு குடியேறினார்.

இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்டனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 1944ல் ஜனவரி 17ல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22 ஆவது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.

1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த மன்னர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1974 இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ் நாடு அரசு சார்பில் கேட்டுக் கொண்டதற்கிணங்க 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட புதுக்கோட்டை அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.

மாவட்ட கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு

ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1997 இல் மறைந்தார். தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். மன்னருக்கு புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாமன்னரின் நூற்றாண்டு விழா குழு சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜூன் 23ஆம் தேதி மன்னரின் பிறந்தநாள் அன்று அறிவித்த அறிவிப்பினை சுட்டிக்காட்டி மன்னரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம், நீதிமன்றம் எதிரில் உள்ள அலுவலர் மன்ற வளாகத்தில் கிழக்குப் பகுதியில் அமைக்கலாம் அல்லது காந்தி பூங்கா மணிக்கூண்டு தெற்கு பகுதியில் அமைக்கலாம் என மூன்று இடங்களை தேர்வு செய்து தங்களின் விருப்பத்தை மனுவாக அளித்து இருந்தனர்.

புதுக்கோட்டை நகர மன்ற கூட்டத்தில் தலைவர் துணைத் தலைவர்

இதற்கிடையில் புதுக்கோட்டை நகர் மன்ற நகராட்சியின் அவசர கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையரின் குடியிருப்பு வளாகத்திற்குள் அதனை ஒட்டிய பகுதிக்குள் அமைக்க முடிவு செய்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர், ஆனாலும் மாவட்ட நிர்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜகோபல தொண்டைமான் நூற்றாண்டு விழா குழுவின் செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சம்பத்குமாரை புதுகை வரலாறு சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில்: மன்னரின் புகழை சிதைக்க வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகம் அதி  தீவிரமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே எங்களின் கோரிக்கையை புறம் தள்ளிவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு கடமைக்காக சுடுகாட்டிற்கு அருகாமையில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் சிலை அமைத்து விழா எடுக்க நினைக்கின்றார்கள் அதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக அரசும் இந்திய அரசும் கேட்டுக் கொண்ட அனைத்தையும் ஒரே கையெழுத்தில் வாரி வழங்கிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்த வள்ளல் பெருமகனாருக்கு நகரின் மையப் பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட கலெக்டர் மறுத்து வருவது ஏன் என்று புரியவில்லை, அவர்கள் தங்களின் முடிவில் உறுதியாக இருந்தால் நாங்கள் தமிழக முதல்வரை சந்தித்து எங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதை விட வேறு வழி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதுகை வரலாறு வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள்

புதுக்கோட்டை பேருந்து நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகாமையிலும், கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி எதிரில் நகரின் மையப்பகுதியில் ரூபாய் ஒன்பது கோடி செலவில் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவால் புதுக்கோட்டை என்ன பயன் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஒரு பக்கம் இருந்தாலும் இதனை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் எதிர்காலத்தில் சாமானியர்கள் தலையில் கை வைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது ஏனென்றால் தற்போது நகரில் இருக்கும் பூங்காக்களை பராமரிக்க முடியாமல் திண்டுக்கல்லில் இருந்து பூட்டுகளை ஆர்டர் செய்து கொண்டு வந்து பல மாத காலமாக பூட்டி வைத்துள்ளனர் அது தனி கதை. அப்படி இருக்கையில் ஒம்போது கோடி ரூபாயில் பூங்க கட்டும் இந்த இடத்தில் மன்னரின் புகழை பறைசாற்றும் வகையில் அவரின் மணிமண்டபத்தையும் பூங்கா உள்ளேயே அமைத்தால் நகராட்சி நிர்வாகம் எதிர்காலத்தில் சாமானியர்களான தங்கள் தலையில் கை வைத்தாலும் சகித்துக் கொள்வார்கள் புதுகை வாசிகள் மேலும் வருங்கால சந்ததியினருக்கு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாற்று பெருமை ஓங்கி ஒலிக்கும் என்பது எங்களின் கருத்து இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மன்னரின் மணிமண்டபத்தை இங்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது புதுகை வரலாறு.

நகர்மன்ற தலைவர், ஆணையருடன் இணைந்து இடம் தேர்வு செய்யும் நகர்மன்ற உறுப்பினர்கள்

மாவட்ட நிர்வாகம் மறுப்பு

மன்னரின் புகழை மறைக்க சதி நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே விழா கமிட்டியாளர்களிடம் கேகேசி கலைக்கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்கா உள்ளே மன்னரின் மணிமண்டப சிலையை அமைக்க விழா குழுவிடம் ஒப்புதல் கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் விழா கமிட்டியாளர்களோ அது போன்ற ஒரு கோரிக்கையை தங்களிடம் மாவட்ட நிர்வாகம் வைக்கவில்லை என்றும் மன்னரின் மணிமண்டபத்தை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் பூங்கா உள்ளே அமைத்தால் நாங்கள் வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நகர்மன்ற தலைவர், ஆணையருடன் இணைந்து இடம் தேர்வு செய்யும் நகர்மன்ற உறுப்பினர்கள்