புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

புதுக்கோட்டை சிவபுரம், ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்” நாளும் நாளும் நல்லாசிரியர் ” என்ற தலைப்பில் உரையாற்றிய மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவரும், வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று ஆசிரிய மாணவர்களாக இருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் நல்லதொரு  சமுதாயத்தை உருவாக்க போகும் ஆசிரியர்கள்  நீங்கள். நித்தம் நித்தம் உங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உங்களைப் புதுப்பித்துக்கொள்ள நல்ல வாசகர்களாக நீங்கள் மாறவேண்டும்.

நல்ல வாசிப்பிற்கு மிகச்சிறந்த உதாரணம் 54 ஆண்டுகள், முதல் 10 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் அடுத்த 44 ஆண்டுகள் தினமணி ஆசிரியராகவும் இருந்தவர். ஏ. என்.சிவராமன். இன்று, மார்ச் 1, அவர் பிறந்தநாள். 1921 ஆம் ஆண்டு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் இன்டர்மீடியேட் படிக்கும் சிவராமன், அக்கல்லூரி முதல்வரிடம் “நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். எனக்கு TC கொடுத்து கல்லூரியிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று கேட்கிறார். “நீ நன்றாகப் படிக்கிறவனாயிற்றே.  போராடினால் சுதந்திரம் கிடைத்துவிடுமா.போய் வகுப்பில் உட்கார்” என்கிறார் முதல்வர்.”இப்ப திலிருந்து தொடர்ந்து போராடினா தானே என்றாவது ஒரு நாள் சுதந்திரம் கிடைக்கும். எனக்கு TC கொடுங்கள் போகிறேன்” என்று மீண்டும் கேட்கிறார். “அப்போ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு. படிப்பில் கெட்டிக்காரனான நீ, சுதந்திரப் போராட்டத்தில் அடி உதை பட்டாலும், ஜெயிலில் இருந்தாலும் படிப்பதை மட்டும்  விடவே கூடாது. படிப்பதை நிறுத்தவே மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு” என்றார். மாணவன் சிவராமனும் தன் வாழ்நாள் முழுவதும் அந்த சத்தியத்தைக் கடைபிடித்தார். ஒரு நல்ல ஆசிரியருக்கும் ஒரு நல்ல மாணவருக்கும் இருந்த உன்னத குணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இது. 97வயதில் அவர் அமரராகும்வரை அவர் வாசிப்பை நிறுத்தவில்லை. 17 மொழிகள் கற்ற அவர், 94 வயதில் ஒரு பேராசிரியர் உதவியோடு, குரானை படிக்க, அரபி மொழியை கற்றுக்கொண்டார். எனவே தினந்தோறும் உங்களை புதுப்பித்துக்கொள்ள வாசியுங்கள்.வாசியுங்கள்.

அதேபோல, 7.32 கோடி பரிசுத் தொகையில் சரிபாதியை தன் சக போட்டியாளர்களுக்கு பகிர்ந்தளித்த மராட்டிய மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் டி சாலேயையும் , “தற்கொலை கிராமம்” என்றழைக்கப்பட்ட வலங்கைமான் அருகில் உள்ள காலச்சேரி கிராமத்தை” தற்கொலை நிகழாத ” கிராமமாக மாற்றிய ஆசிரியர் ஆனந்த் போன்றவர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள். ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை , ஒரு ஆசிரியர் இவர்களால் உலகத்தை மாற்றமுடியும் என்றார் நோபல் பரிசு பெற்ற  மலாலா யூசுப் சாய். அது உண்மை யுனெஸ்கோ 21 ஆம் நூற்றாண்டுக்கான கல்வித்தூண்கள் என்று அறிந்து கொள்ள கற்றல், கற்பதற்குக் கற்றல், கூட்டாக வாழக் கற்றல் தானாக இருக்கக்கற்றல் என்று நான்கைச் சொல்கிறது. தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். அதன்படி வாழ கற்றுக்கொள்ளுங்கள். அது அனைவருடனும் கூட்டாக வாழக் கற்றுக்கொடுக்கும். அதன் மூலம் தானாக, தனித்துவம்மிக்கவர்களாக நீங்கள் மாறுவீர்கள். கற்றவனாக இரு. கற்றுக்கொள்பவனாய் இரு கற்பிப்பவனாய் இரு என்று நபிகள் நாயகம் சொல்கிறார்.

அதற்கு வாசிப்பை நேசியுங்கள். புதியதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். ‘தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் மனிதனை இயக்கும் சக்தி’ என்கிறார் எழுத்தாளர் சுஜாதா. எனவே புதிய இன்றைய கற்றல் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு போதியுங்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். நீங்கள் நாளும் நாளும் நல்லாசிரியராய் திகழ்வீர்கள்.” என்றார்..

கருத்தரங்கிற்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் அழகுநிலா தலைமை வகித்தார். முன்னதாக பி.எட், இரண்டாமாண்டு மாணவி பர்வதா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நுண்மதி நன்றி கூறினார். இறுதியில் வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் கலாமின் எழுச்சியுரை நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.