
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கான காய்கறி விதைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆண்டுதோறும் 6 வகையான காய்கறி சிறு தளைகள் அடங்கிய ஆடிப் பட்ட காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டிலும், விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கு 1,000 சிறு தளைகள் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்காய்கறி மற்றும் பழங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கத் தேவையான வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள், நிக்கோடினிக் அமிலங்கள், அஸ்கார்பிக் அமிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன.
ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறங்களிலும், மாடி வெளிகளிலும் காலியாக உள்ள இடங்களில் காய்கறி உற்பத்தி செய்து, தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மிளகாய், வெண்டை, தட்டைபயிறு, சுரை, கொத்தவரை, கத்தரி ஆகிய 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய சிறு தளைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப காய்கறி சிறு தளைகள் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் ஆடிப் பட்ட காய்கறி விதைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளாம் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குநர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.