புதுக்கோட்டையில் மனுக்கொடுக்கச் சென்ற மாணவர்களைத் தாக்குவதா? கல்லூரி முதல்வரைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கொடுக்கச் சென்ற மாணவர்களைத் தாக்கிய புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வரைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு தன்னாட்சி பெற்ற கல்லூரியான புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் சுமார் 4600 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடார்ச்சியாக கோரிக்கை வைத்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், உடனடியாக குடிநீர், கழிப்பிட வசதியையாவது செய்துதர வலியுறுத்தி கல்லூரி முதல்வர் திருச்செல்வத்தை சந்தித்து மாணவர்கள் மனுக்கொடுத்துள்ளனர். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் “நீயெல்லாம் மனுக்கொடுக்க வந்துட்டியா? நீ என்ன மாணவர் சங்கத்தைச்  சேர்ந்தவனா? உனது பெற்றோரை அழைத்து டி.சி கொடுக்கிறேன் பார்” என்று மிரட்டும் தொனியில் பேசியதோடு மட்டுமல்லாது நான்கு மாணவர்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்து ஒரு ரவுடியைப் போல நடந்துகொண்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளைப் பறக்கணித்து முதல்வரைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆவேசத்தைக் கண்ட புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வருடன் பேச்சுவர்த்தை நடத்தினார்.

பேச்சுவார்தையின் முடிவு குறித்து தெரிவித்த மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன், பேச்சுவார்த்தையின் போது தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், இதுபோன்ற தவறு இனிமேல் நடைபெறாது எனவும், அடுத்த 10  தினங்களுக்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார். இதனைத் தொடார்ந்து போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.