புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி. மாணவர்களுக்கு  முதன்மைக்கல்வி அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்

புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் , பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் நிறுவனம் இணைந்து நடத்திய புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு தலைமை தாங்கி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசும்போது கூறியதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 9- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் தமிழ்நாடு  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மிக சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறது.  மாணவர்களின் சிந்தனையில் உதித்த புதிய கருத்துகளை அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாற்றி அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் மகத்தான திட்டம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமாகும். இத்திட்டத்தில் நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 125 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 136 ஆசிரியர்கள் 3101 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் இத்திட்டத்தில் வழிகாட்டி ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் வழிகாட்டி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பாடங்களை முடித்தல் புதுமை யோசனைகளை சமர்ப்பித்தல் ஆகிய நிலைகளில் 100% நம் மாவட்டம் முடித்து அதிலிருந்து சிறந்த ஏழு அணிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளின் மாணவர் குழுக்கள்  தங்களது படைப்புகளை முன்மாதிரியாக உருவாக்க மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்று செய்துள்ளீர்கள்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட ஏழு அணிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றால் ரூபாய் இருபத்தைந்தாயிரம், முதல் பரிசு வென்ற மாணவர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட இருக்கிறது. எனவே இங்கு பங்கேற்றுள்ள மாணவர்கள் தங்களது படைப்புகளின் வாயிலாக  போட்டிகளில் வெல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தை நம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும்  மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளருக்கும்,ஈ.டி 2 கள ஒருங்கிணைப்பாளருக்கும் (பொ) பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துகளை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார் முன்னதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி. சாலை செந்தில் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மெளண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின்  முதல்வர் (நிர்வாகம்) எஸ். கிருபா ஜெபராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக மாவட்ட ஈ.டி2 ஒருங்கிணைப்பாளர்(பொ) அருமைரூபன்ஜோசப் நன்றி கூறினார்.