“புதுகை வரலாறு” செய்தி எதிரொலி! களத்தில் இறங்கியது ஆவின் நிர்வாகம்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் குழந்தைகள், இல்லத்தரசிகள் முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி புதுகை வரலாறு நாளிதழில் இன்று நவ.25ம் தேதி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து ஆவின் பால் மார்க்கெட்டிங் மேனேஜர் சீராளன் உள்ளிட்ட அதிகாரிகள் புதுகை மாவட்டம் முழுவதும் பால் தட்டுப்பாடு குறித்து இன்று நேரில் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து ஆவின் பால் மார்க்கெட்டிங் மேனேஜர் சீராளன் தெரிவித்ததாவது:

புதுகை மாவட்டத்தில் 350 கிராமங்களில் இருந்து ஒரு நாளைக்கு 70 ஆயிரம் லிட்டர் வரை விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு 28 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பால் விநியோகம் செய்ய 15 வாகனங்கள் செல்கிறது. 31 ஆயிரம் லிட்டர் வரை ஆவின் பால் சப்ளை செய்கிறோம். மீதமுள்ள பாலை சென்னைக்கு அனுப்புகிறோம். புதுகை மாவட்டத்தில் மேலும் 5 ஆயிரம் லிட்டர் பால் அதிகரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டம் முழுவதும் 350 முகவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பால் லிட்டர் விலையில் 5 சதவீதம் கமிஷனாக வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை நகரத்தை பொறுத்தவரை 25 வார்டுகளுக்கு முகவர்கள் உள்ளனர். மீதமுள்ள 17 வார்டுகளுக்கு முகவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை முகவர்களாக நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

முகவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு ஏற்ப எத்தனை லிட்டர் ஆவின் பால் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு சிலர் ஆவினுக்கு பணம் கட்டாமல் இருப்பதால் ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு பால் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், மக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இருந்தால் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் செய்யலாம். ஆவின் பொதுமேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.