புதுகை வரலாறு கல்வி கண்காட்சியும், மாணவர்களின் கருத்துகளும்!

மழலைக்கல்வியில் சிரிப்பை கற்று கொள்ள வேண்டும். பள்ளி கல்வியில் அறிவை விரிவடைய செய்ய வேண்டும். கல்லூரி கல்வி என்பது நமக்கான அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொண்டு செல்லுவதற்கு உறுதுணையான ஒரு மையம். அப்படிப்பட்ட அந்த மையத்தை உருவாக்குவதற்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேவைப்படும். இணையத்தில் தேடுவதற்கும், நேரடியாக பார்வையிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட வாய்பபை உருவாக்க புதுகை வரலாறு நாளிதழ் தொடர்ந்து பணிசெய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். நேற்று தொடங்கிய கல்வி கண்காட்சி அரங்குகளில் எங்கே பார்த்தாலும் பட்டாம்பூச்சி பறப்பது போல மாணவர்களின் படையெடுப்பும், ஒவியங்களை வரைந்த குழந்தைகளின் கை வண்ணமும், பெற்றோர்களின் ஆரவாரமும் அசத்தல் என்று கூறும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது. இந்த கல்வி கண்காட்சியை பார்வையிட்ட சில மாணவர்களின் கருத்துகள்.

அ.மஹாலெட்சுமி கற்பக விநாயகா மெடரிக் மேல்நிலைப்பள்ளி சிவபுரம்

  பள்ளி முடித்து கல்லூரி சேருவதற்காக தேர்வு முடிவுக்கு எல்லோரும் காத்திருக்கிறோம். கண்டிப்பாக நம்முடைய மாநிலம் கல்வியில் சிறந்து விளங்குவதால் நல்ல தேர்ச்சி சதவீதம் வரலாம். ஆனால் வந்தவுடன் இணையத்தில் கல்லூரியை தேடிப்பார்ப்போம். பல கல்லூரி நிறுவனங்கள் விளம்பரங்கள் மட்டும் தான் இருக்கும் ஆனால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அந்த விளம்பரங்களை நம்பி சேர்க்கைகாக போய் வரிசையில் காத்திருப்போம். கூட்டம் அதிகம் இருப்பதால் 10நிமிடத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டு வீட்டில் வந்து யோசிப்போம் நாம் தேர்தெடுத்த கல்லூரி சரிதானா, பிரச்னைகள் எதுவும் வராமல் கல்லூரி படிப்பை முடித்து விடலாமா என்று பல யோசனைகள் மனதிற்குள் உருவாகும். ஆனால் ஒரு கல்லூரி நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் பேராசிரியர்களோடு கிட்டத்தட்ட 1 மணி முதல் 2 மணி நேரம் நேரடியாக சந்தித்து பல கேள்விகளை முன்வைத்து சரியான பதில்களோடு அந்த கல்லூரியில் படிப்பதால் மனதில் ஒரு கேள்வியும் உருவாக வாய்ப்பில்லை. சுலபமாக படித்து பட்டம் பெறுவதற்கு இந்த கல்வி கண்காட்சி பெரிய உதவி எனலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் என் வீட்டில் சிறப்பான கல்லூரியை தேர்தெடுக்கும் வாய்ப்பை என்னுடைய பெற்றோர்கள் சுதந்திரமாக வழங்கியுள்ளனர். அதனால் கண்டிப்பாக இருபாலர் படிக்கும் கல்லூரியைத் தான் நான் தேர்தெடுப்பேன். பெரும்பாலான கல்லூரி அரங்குகளில் படிக்கும் போதே வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு கொடுப்பதாக தெரிவித்தனர்.

பிரியதர்ஷினி திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை

 ஒரளவு மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையில் இங்கே வந்துள்ளேன். மாணவர்கள் புதிய படிப்புகளையும், புதிய கல்வி நிலையங்களையும் தேடி பயணம் மேற்கொள்ளும் காலம் இது. இத்தகைய சூழ்நிலையில் இந்த கண்காட்சி எல்லோருக்கும் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். அரங்குகளில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களிலும் கட்டணத் தொகை குறைவாகத்தான் தெரிகிறது. நான் கூட பெற்றோர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. அரசுக் கல்லூரியில் சேரலாம் ம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் எனது அப்பாவும் கூட வந்து தொகையை விசாரித்தால் தனியார் கல்லூரியிலேயே படிக்கலாம் என்று சொல்லிவிட்டார். இப்படி பெரியளவில் கல்வி கண்காட்சி நடத்துவதால் பல இன்னல்கள், பொருளாதாரம் ஆகிய பிரச்னைகள் வந்திருக்கலாம் அல்லது வரலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர்களின் உயர் கல்வி தான் முக்கியம் என நினைத்து இதில் இறங்கியுள்ள புதுகை வரலாறு நாளிதழ் மற்றும் அவர்களோடு இணைந்து பயணம் செய்ய வேண்டும், மாணவர்கள் அனைத்து வகையிலும் சாதனை புரிய வேண்டும் என்று நல்லுள்ளம் கொண்ட விளம்பரதாரர்கள் அனைவருக்கும் நம்முடைய மாவட்ட மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஸ்ரீநிலவன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி

தமிழகத்தில் வரலாற்று புகழ்பெற்று விளங்கும் நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி கண்காட்சி நடப்பது என்பது என்னைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு பெரிய கொடை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை கண்காட்சி நடப்பது கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஏனென்றால் பள்ளி விடுமுறை என்றாலும் வீடு, வயல் ஆகியவற்றில் வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதை முடித்து விட்டு வரவேண்டிய சூழ்நிலை ஆகவே பொறுமையாக வந்து கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட ஒவியங்களை வரைந்துள்ளேன். அண்மையில் மாவட்ட ஆட்சியரின் படத்தை வரைந்து முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கினேன். ஒவியங்கள் வரையும் போது பெரும்பாலும் இளையராஜா, ஒவியர் மாருதி அவர்களுடைய ஒவியங்களை கண் முன்னே கொண்டு நிறுத்தி விடுவேன். இங்கே நான் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு அரங்குகளிலும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் எப்படி உள்ளது, என்ன மாதிரி விஷயங்களை மாணவர்களிடம் கொண்டு செல்லுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகத் தான். நான் நினைத்து வந்த மாதிரியே அழகாக, வரிசையாகவும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஹரிஹரன்-நேஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி

கடந்த நான்கு ஆண்டுகளாக திருவிழா போல இக்கண்காட்சியை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளனர். எனக்கு தெரிந்தளவிற்கு கொரோனா ஊரடங்குக்கு பின்பு நாளிதழ் சார்பில் நடக்கும் முதல் கல்வி கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு படிப்பிற்கும் தலை சிறந்த கல்வியாளர்களின் பேச்சு நம்முடைய பாடப்பிரிவை தேர்தெடுக்க பெரிய உதவியாக இருந்தது. எனக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு விருப்பமில்லை. இந்தக் கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அயல் நாட்டு கல்வி, ஹோட்டல் மேலாண்மை, ஆடைவடிமைப்பியல், அழுகு கலை போன்ற எண்ணற்ற துறை சார்ந்த கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன. எனது இரண்டு  பள்ளி நண்பர்களுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டுள்ளோம். இப்போதே வகுப்பறை தோழர்களுக்கு கட்செவி அஞ்சல் மூலமாக தகவலை தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து பார்ப்பதாக சொல்லியுள்ளனர். வெயிலின் தாக்கம் வெளியே அதிகமாக இருந்தாலும், உள்ளே குளிரூட்டப்பட்ட அரங்கம் என்பதால் திரும்பி வர மனது இடம் கொடுக்கவில்லை. அதனால் 3 மணிநேரம் இருந்து விட்டு தான் வீட்டுக்கு புறப்பட்டோம்.        

பி.நடராஜ். பிரகதாம்பாள் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை

அப்பா கட்டிட மேற்பார்வையாளர் அம்மா இல்லத்தரசி நடுத்தர குடும்பம் தான் என்றாலும் கல்வி வாழ்க்கையில் எனக்கு பின்னடைவு வந்து விடக்கூடாது என்பதில் அம்மா புஷ்பா குறிக்கோளாக இருக்கிறார். அவர் தான் இது போன்ற கண்காட்சியை தவற விடக்கூடாது நீ போய் சென்று பார்த்து விட்டு வா என்றார். ஆனால் இங்கே வந்தவுடன் எனக்கே ஆச்சரியமாக இருந்தது உள்ளே நுழைந்தவுடன் வரவேற்க ஒரு குழுவினர், அடுத்ததாக செல்பி (தற்படம்) எடுப்பதற்காக தனியிடம். இலவச மருத்துவ பரிசோதனைக்காக ஒரு இடம். இரண்டாவது மாடியில் மதிய உணவு, மேல் மாடியில் கல்வி நிறுவன  அரங்குகள் வியப்பாகவும், விசித்திரமாகவும் இருந்தது. பள்ளி-கல்லூரி இரண்டும் என்ன வேறுபாடு என்றால் ஒன்று நமக்கான தொடக்கம் அது அறிவை வளர்த்து எடுக்கும் மற்றொன்று அதையும் தாண்டி வேலை வாய்ப்பு என்ற மாற்றத்தையும், நம்முடைய முன்னேற்றத்தையும் தேடிக் கொடுக்கும் ஒரு முக்கிய இடமாக கருத வேண்டும். அறியாத வயதால் பள்ளிகளில் சில தவறுகள் செய்திருப்போம். அதை கல்லூரி வாழ்க்கையில் திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் பாதை திசை மாறிவிடும்.

                                                          என கல்வி கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

               தொகுப்பு- பொ.ஜெயச்சந்திரன் திருவரங்குளம்.