பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் யோகி ஆதித்யநாத்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று உத்தரப்பிரதசே முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய யோகி ஆதித்யாநாத், ”உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது. புதிய நடைமுறையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மாநிலமாகவும், நல்லாட்சி நடைபெறும் மாநிலமாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்வதால் உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்களும் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய முதலீடுகளின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 1.61 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நோய்வாய்பட்ட மாநிலமாக கருதப்பட்ட உத்தரப்பிரதேசம் தற்போது ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. குஜராத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி நமக்கு மிகப் பெரிய உந்துதலை வழங்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை காரணமாக இந்தியாவுக்கு ஜி20 தலைமை கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவின் திறனை உலகிற்குக் காட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜி20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு உத்தரப்பிரதேசத்திற்கும் கிடைத்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, உலகின் 4வது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.” என குறிப்பிட்டார்.