பாலாற்றின் குறுக்கே கூடுதல் நீர்த்தேக்கம் கட்ட ஆந்திர அரசு முயற்ச்சி – அரசு கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் 

“பாலாற்றின் குறுக்கே தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த கையாலாகாத அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக் கேடானது. ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், பல்வேறு அணை கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்போதைய ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.

தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணி மிகனிபள்ளே என்ற இடத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்வர் பேசும்போது, தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக கூறியுள்ளார். இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர் தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்புகளால் தமிழக விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம் மாவட்டத்தில் 33 கி.மீ. பயணிக்கிறது. பின்பு நம் தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்த பட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது என்று
அளவீடுகள் தெரிவிக்கின்றன. இதில் கர்நாடகா 20 டிஎம்சியும், ஆந்திரா 20 டிஎம்சியும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீரும் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தம். ஆனால், தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.

திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. இந்த அரசு நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.