பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு: ராகுல் பெருமிதம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என்று ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று குருஷேத்திரத்தை அடைந்தார். குருக்ஷேத்ராவிற்கு அருகிலுள்ள சமனாவில் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனது தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் அச்சத்திற்கு எதிரானது என்பதை இந்த பாத யாத்திரை வலியுறுத்துகிறது. அத்துடன் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரானதும்கூட. நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே யாத்திரையின் நோக்கமாகும்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தற்போது ஹரியாணா வழியாக செல்கிறேன். இதுவரையிலான பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இத்தகைய ஒரு பயணத்தில்தான் நாட்டின் இதயம் சொல்வதை காதுகொடுத்து கேட்கமுடிகிறது. அதாவது நாட்டின் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசமுடிகிறது. யாத்திரைக்கு ஹரியானாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இது ஆற்றல்மிக்க, உற்சாகமான ஒரு வரவேற்பு ஆகும்.தொடங்கும்போது பலரும் யாத்திரையை குறித்து விமர்சனம் செய்தார்கள், அதாவது கேரளாவில் கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் கர்நாடகாவில் கிடைக்காது, அது பாஜக ஆளும் மாநிலம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஆனால் அங்குதான் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தென்னிந்தியாவில் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல மகாராஷ்டிரா அடையும்போது இதே மாதிரியான விமர்சனத்தை பரப்பினார்கள். அங்கும் ஆதரவும் வரவேற்பும் கிடைக்காது என்றார்கள். நாங்கள் மகாராஷ்டிராவை அடைந்தபோது, தெற்கை விட சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்றார்.