பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.

2021-22 ஆம் ஆண்டில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பிறப்பு முதல் 19 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிக்கான முன் ஆயத்த கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கணக்கெடுக்கும் பணி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின் போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அதிகாரிகள் ஆகியோர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.