பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தூக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கீளப்பூடி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்த விவசாயி பெரியசாமி (75). இவர், தனது சாதி கொண்டாரெட்டி என்றும், தனக்கு எஸ்.டி. சான்றிதழ் வேண்டும் எனவும் கேட்டு பலமுறை திருத்தணி கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்காக அவர் சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் காலை பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பெரியசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பட்டு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பள்ளிப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.