பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் : எடப்பாடி கே.பழனிசாமி

சென்னை, ஆக.14-

பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூச்சல், அமளிக்கு மத்தியில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி  கூறியதாவது:- சட்டசபை தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறைப்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். வாக்குறுதி அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவினர் பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது. நமது அம்மா பத்திரிகை அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஒரு நாள் பத்திரிகையை வெளியிட முடியாமல் தடுத்ததற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்தார்.