“படிப்பதற்கு எல்லை இல்லை” குரூப் 1 தேர்வு வெற்றியாளர் பவானியா

புதுக்கோட்டை பெருமாநாடு, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் உரையாற்றிய, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கணிப்பாளராக ஆகவிருக்கும் வி. பவானியா இவ்வாறு குறிப்பிட்டார்.

போட்டித் தேர்வுக்கு தயாராகவிருக்கும் ஒவ்வொருவரும் நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவர்களின் வார்த்தைகளையே எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மனதில் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். என் நம்பிக்கையை சிதைக்கின்ற எதையும் எப்போதும் கவனத்தில் கொள்வதில்லை.

நாம் படிப்பதற்கு எல்லையில்லை. ஆனால் நாம் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், செல்போன் பார்ப்பதற்கும் எல்லையை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை பார்க்கும் நேரம்கூட நம் வாழ்க்கைக்கு பயனளிக்கின்ற வகையில் இருக்க வேண்டும். போட்டித் தேர்வுதான் என்றில்லை நாம் எதைச் செய்ய விரும்பினாலும் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அது தான் நமக்கு வெற்றியைத் தரும். அரசுப்பணிக்கு தேர்வாகவில்லையென்றால் என் அப்பா நடத்திக்கொண்டிருக்கும் சிறிய உணவகத்தைப் பெரிதாக்கி தொழில்  செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கிருந்தது. அதுபோல எதையும் மாற்றத்திற்குள்ளாக்குகிற வகையில் நாம் சிந்திக்க வேண்டும். நான் அரசுப் பணிக்கு வர வேண்டுமென்று எண்ணியதற்கு என் கிராமம் கூட ஒரு காரணம். என் கிராமத்துச் சூழ்நிலையை மாற்ற அரசுப்பணி அவசியம் என்று கருதினேன். நிச்சயமாக என் கிராமச் சூழ்நிலையை மாற்ற இந்த அரசுப்பணி உதவும். போட்டித் தேர்வுக்கு தயாராகிறவர்கள் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நம் சொந்த மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.

மனம் அமைதியாக இருப்பதற்கு தியானம் யோக செய்யப் பழகிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். நாம் வாழும் சமூகத்திற்கு ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள் என்று உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு கல்லூரி தலைவர் ரமா சிங்காரம் தலைமை வகித்தார். செயலர் சிங்காரம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மீ.வீரப்பன் வரவேற்புரையாற்றினார். வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக துணை முதல்வர் ஜெயகௌரி நன்றியுரையாற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் முத்தழகன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.