நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க ஆராய்ச்சி! சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் இன்று நடந்த சுகாதார மாநாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க ஆராய்ச்சி தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதார மாநாடு 2022 இன்று நவ.15ம் தேதி நடைபெற்றது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறோம். ஊரகப் பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள்.

ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் வாழும் இடங்களிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் என்று சொல்லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக வழங்கப்படும் ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ திட்டம் 2021ம் ஆண்டு டிச., 18ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்திக் குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும். நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆராய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.