
‘‘நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கூட அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை செய்தால் போதும். அறிகுறிகள் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை,” என்று தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு, சுகாதார சேவையின் அனைத்து துணை இயக்குநர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் சுகாதார அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம் வருமாறு:
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா பரிசோதனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவாசக் கோளாறுகள், வாசனை, சுவை இழப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) தேவை இல்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கூட அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை செய்தால் போதும். அறிகுறிகள் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் வருபவர்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.