நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!!

நீட் தேர்வுக்கு எதிராக நேற்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சட்டமசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது “கொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூ.5000 செலவானது.

இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசினால் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை; முதல் முதலாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த சில மாணவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடனே உள்ளனர்; மாணவர்கள் இடையே அச்சமற்ற சூழல் உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம். ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியதுபோல பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடந்த ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியதை சட்டமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது. பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.த மிழ்நாட்டில் வரும் 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

மேலும் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.