
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.மலையனூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் கோவிந்தன் மகன் ஐயப்பன்(24) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தொடர்பாக அவரை எலவனாசூர் கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டுமான கூலித்தொழிலாளி பெண் கணபதி மனைவி வெண்ணிலா(36) என்பவரை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஆறுமுகம்(40) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் திருநாவலூர் காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் ஐயப்பன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தியாகராஜபுரத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு(55) என்பவர் கடந்த மாதம் 11ம் தேதி 7.5 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளிசந்தலை பகுதியை சேர்ந்த அய்யர்(42) என்பவர் கடந்த மாதம் 3ம் தேதி 150 லிட்டர் கள்ளச்சாராயத்துடன் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.