நடிகை மீரா மிதுனுக்கு ஆக.27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை  பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.  இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார். 

மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் தானும் இருப்பேன் எனப் பேசி வீடியோ வெளியிட்டார். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டு அந்த வீடியோவில் பேசியிருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மீரா மிதுன் அவருடைய ஆண் நண்பருடன் பதுங்கி இருப்பது தெரிந்ததையடுத்து போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்த போலீசாருடன் நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

 போராட்டத்திற்கு பிறகு சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்தபோது அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் அதே வாகனத்தில் அழைத்து வந்தனர். ஆனாலும் போலீஸ் வாகனத்திலேயே மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டார். 

24 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 4 வது நுழைவுவாயில் வழியாக உள்ளே கொண்டு வந்தபோது ஊடகங்கள் காட்சிகளை பதிவு செய்தனர். அப்போது மீரா மிதுன், தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுடன் விசாரணை நடத்தி வந்தனர். 

ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன்  வாக்குவாதம் செய்து வந்தார். தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நடிகை மீரா மிதுனை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அழகி போட்டி நடத்துவதாக கூறி மோசடி உள்ளிட்ட மேலும் சில வழக்குகளும் மீரா மிதுன் மீது உள்ளன.