
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் வருகை புரிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போது தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு புகழாரம் சூட்ட வேண்டாமெனவும், அவையில் உள்ளவர்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசு கூறியிருப்பது தவறு இல்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து வருகின்ற 31ம் தேதி கட்சியின் 15வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்று மாவட்ட கழகத் தோழர்களுடன் ஆலோசித்த முடிவு எடுக்கப்படும்.
வடிவேலுக்கு ரெட்கார்ட் நீக்கம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வடிவேலுக்கு ரெட்கார்ட் போட்டதும் தெரியாது, அதனை நீக்கியதும் தெரியாது; உங்கள் மூலமாக தான் அதனை நான் தெரிந்து கொண்டேன் என கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதேசமயம் மாணவர்கள் எத்தனை நாட்கள் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருக்க முடியும், அவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு அணுப்புவது சரியான தான் முடிவு என தெரிவித்தார்.
பனைமரம் பாதுகாப்புச் சட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பனை மரத்தின் பயன்பாடு அதிகம் உள்ளதாகவும், அதில் பாதுகாப்பு மிக அவசியம் என்றும் கூறினார்.
நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை; நான் நடிகனாக மட்டுமே இருக்கேன் என தெரிவித்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி ஆலோசனை கூறியுள்ள நிலையில் படப்பிடிப்பு தடைபடாமல் இருக்கவும், தனது உடல் ஒத்துழைப்பதாலும் படப்பிடிப்புக்கு தொடர்ந்து செல்வதாக அவர் தெரிவித்தார்.