தொழிலாளர்கள் தேசத்தை கட்டி எழுப்பும் தூண்கள் தொழிலாளர் துறையில் பெண்களின் பங்கு தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

தொழிலாளர்கள் நம் தேசத்தை கட்டி எழுப்பும் தூண்கள். இந்த துறையில் பெண்கள் சக்தியை பயன்படுத்துவதன் வாயிலாக இலக்குகளை விரைவாக அடைய முடியும் என பிரதமர் மோடி கூறினார்.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் துறை அமைச்சர்கள், செயலர்களின் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் அன்மையில் நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, “வீடியோ கான்பரன்ஸ்” வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:-

வளர்ந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் கனவுகள் மற்றும் எண்ணங்களை நனவாக்குவதில்  தொழிலாளர் சக்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தரப்படுகின்றன. இவை தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கின்றன. வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது, விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்வது ஆகியவை எதிர்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் 2047ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை தயாரித்து வருகிறது.

இதுப்போன்ற நேரத்தில் இதற்கு ஏற்ற பணியாளர்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக இதுப்போன்ற நேரத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். தொழிலாளர் துறையில் முடிவுகளை விரைவாக எடுத்து, சரியான நேரத்தில் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். தற்போது நடந்துவரும் தொழில் புரட்சிக்கு இது மிகவும் முக்கியம். முதல் 3 தொழில் புரட்சிகளின் பலன்களைப் பெறுவதில் நாம் பின்தங்கியுள்ளோம். அதனால் வேலைகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நாம் மாற வேண்டும். ஆன்லைன் சந்தை மற்றும் சேவைத்துறையில் சரியான கொள்கையைப் பின்பற்றினால், சர்வதேச அளவில் நாம் முன்னணி இடத்திற்கு வர முடியும். தொழிலாளர்கள் இந்த நாட்டை கட்டியெழுப்பும் தூண்கள். பெண் சக்தியைப் பயன்படுத்துவதன் வாயிலாக இலக்குகளை விரைவாக அடைய முடியும். பெண் தொழிலாளர்களுக்கு இன்னும் என்ன திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.