தெலுங்கானா அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர ரெட்டி என்ற மகனும், மம்தா ரெட்டி என்ற மகளும் உள்ளனர்.

மல்லா ரெட்டிக்கு தெலுங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவ பல்கலைக்கழகம், என்ஜினியரிங் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும், மல்லா ரெட்டி நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளன. இவரது மகன் மகேந்திர ரெட்டி, மகள் மம்தா ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர ரெட்டி ஆகியோர் ரியல் எஸ்டேட் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 3 பேரும் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று நவ.22ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் மல்லா ரெட்டிக்கு சொந்தமான ஓம் பள்ளியில் உள்ள பண்ணை வீடு, ரூயா ஜன பள்ளி, நெட்சில்லாவில் உள்ள கல்லூரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் அவரது மகன், மகள், உறவினர்கள் வீடு என 50 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை சோதனை குறித்து தகவலறிந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மல்லா ரெட்டி வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் இணைய உள்ளதாக பா.ஜ., எம்.பி., தர்மபுரி அரவிந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த டி.ஆர்.எஸ்., கட்சி தொண்டர்கள் தர்மபுரி அரவிந்த் எம்.பி., வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஏற்கனவே, தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., கட்சி மற்றும் பா.ஜ.,வினர் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலுங்கானா அமைச்சரின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே  பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.