தென்காசியில் டிட்டோஜாக் கூட்டமைப்பு சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243 ஐ ரத்து செய்திடவும், அரசாணை 243க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கக்கோரியும் கருப்பு பட்டை மற்றும் சட்டை  அணிந்து மாபெரும் ஆர்பாட்டம் புதிய பேருந்து நிலையம்  அருகே உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்  வாயிலில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா தலைமை வகித்த்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆரோக்கியராசு வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களை  பெரிதும் பாதிக்கும் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்ட அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும், அரசாணைக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை இயக்குனர்கள் கலந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க கோரியும், டிட்டோஜாக்கின் 12 அம்ச கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசாணைகள் வெளியிடக் கோரியும் கோரிக்கை முழக்க கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்  கனகராஜ், குமரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ரமேஷ், சுதர்சன், மாடசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ராஜசேகரன், அகஸ்டஸ்ஜாண், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம், மகளிர் அணி ரேச்சல் மல்லிகா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட செயலாளர் ராஜ் குமார் நன்றி கூறினார். இதில் அரசாணை 243 ரத்து செய்ய கோரியும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற பிப்ரவரி 19 சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.