தென்காசியில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் புதுகை வரலாறு செய்தியாளருக்கு கலெக்டர் பாராட்டு
 

தென்காசி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க கண்காட்சியில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற புதுகை வரலாறு செய்தியாளர் துரைசாமிபாண்டியனுக்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.

தென்காசி  இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில்  ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும்  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது ஓயா உழைப்பில் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி எனும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர், மேலும் அரசின் திட்டங்கள் குறித்தும் சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண் காட்சி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  சிறப்பாக  அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பத்திரிகையாளர்களுக்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பரதாலயா , புருஷோத்தமன் நாட்டியக்குழு, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியருக்கும் மாவட்ட ஆட்சியர் பரிசு கேடயங்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் செய்தியாளர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இப்போ போட்டியில் புதுகை வரலாறு தென்காசி மாவட்ட செய்தியாளர் துரைசாமி பாண்டியன் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் 3ம் பரிசினை பெற்றார். அவருக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் சான்றிதழ்களும்,கேடயமும் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவரும், அறங்காவலர் குழு தலைவருமான சுப்பையா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம.சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 20 = 25