தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி., வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொதுவாழ்வில் இருக்கும்போது நமது சொந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. அதுபோன்ற எண்ணத்தில் தற்போது வரையில் நான் செயல்பட்டதும் இல்லை. குறிப்பாக, தென் தமிழ்நாடு மழை இல்லை என்றால் கடும் வறட்சியான பகுதியாக இருக்கும்.

அங்குள்ள மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். அப்பகுதியில் உள்ள முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோல சிறுதொழிலை தொடங்கினார்கள். தம்மோடு தொழில் வாய்ப்புகள் முடிந்துவிடாமல் எதிர்கால தலைமுறைகளும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில் பயிற்சி பெற்று தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற தீப்பெட்டி தொழிற்சாலைகளை நிறுவி அந்த பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வைத்துள்ளனர்.

அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தீப்பெட்டி உற்பத்தியில் உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்வது சிவகாசிதான். தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரியது. விவசாயம் செழிக்காத பூமியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகள். விரைவில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராம் உறுதியளித்து பேசினார்.