
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை 21-ந் தேதி முதல் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய நாளை முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, அரசு விரைவு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. பயணிகளின் முன்பதிவை பொறுத்து மேலும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும். விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும். என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.