
சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கீதாபவன் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், 54 மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
திருமணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: இன்றைக்கு நான் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய உயர்ந்த பொறுப்பில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகி உயர்ந்த பகுதி இந்த ஆயிரம் விளக்கு பகுதி. அதில் குறிப்பாக இந்த கோபாலபுரம் பகுதிதான்.
நான் மட்டுமா? நமது தமிழ்நாட்டு முதல்வராக இருந்து நம்மை ஆளாக்கிய கலைஞரும் வாழ்ந்த பகுதி இந்த கோபாலபுரம் பகுதிதான். அவர் கோலோச்சிய இடம் தான் இந்த கோபாலபுரம். கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், இந்திய துணைக் கண்டத்துக்கே ஒரு தலையாய இடமாக மறக்க முடியாத இடமாக கோபாலபுரம் விளங்கி கொண்டிருக்கிறது.
கோபாலபுரத்துக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசு தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் வந்து போய் இருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய பகுதியில் உங்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைவிட பெருமை உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்தோம். 1996-ல் நான் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அடுத்த நாளே மழை வந்தது. 20 நாட்களுக்கு மழை பெய்ததால் சென்னை முழுவதும் மழை பாதித்த பகுதிகளை சீர்படுத்தினோம். நான் சென்னையை பார்வையிடச் சென்ற போது அப்போது முதல்வராக இருந்த கலைஞரும் மழை தேசத்தை பார்வையிட வந்தார். அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடித்துள்ளோம். இன்னும் மிச்சம் இருக்கிற பணிகளையும் செய்து முடிப்போம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை முழுமையாக செய்து முடிப்போம். கலைஞர் அப்போது அவர் கூறும்போது நீ மேயராக வந்தது முதல் மழைதான் என்றார்.
அதேபோல், இப்போது நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்போது தண்ணீர் பிரச்சினை இல்லை. மழை பெய்தாலும் அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.