திருவொற்றியூரில் மாநகராட்சி இடத்தில் பழ வியாபாரம் கடைகளை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக மார்க்கெட் பகுதியில் 350க்கும் மேற்பட்ட காய்கறி கடை, பழக்கடைகள் மற்றும் மீன் கடைகள் இயங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் 27 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி நகர்புற ஆரோக்கிய மற்றும் சுகாதார மையம் கட்டுவதற்கு பூஜைகள் போடப்பட்டன. இதற்கு பழக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி திருவொற்றியூர் 1வது மண்டலம் ஆணையாளர் சங்கரன் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு  பழ வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் பழக்கடைகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

இதனால், பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மீன்கள் விற்பதற்காக வந்த மீனவப்பெண்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் மீன்களுக்கு ஐஸ் வைக்காமல் தெருவோரமாக வைத்துள்ளதால் மீன்கள் நஷ்டப்படும் என புலம்பி தள்ளினர்.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ரவி தலைமையில் வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தனியரசு விரைந்து வந்து பழ வியாபாரிகளிடம் பேச்சு நடத்தி இடிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று இடம் கொடுக்கப்படும் என்றும்  மார்க்கெட் பகுதியில் 27 லட்சம் ரூபாய் செலவில் புதிய கழிப்பிடம் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் கடை இடிக்கும் பணி தொடர்ந்தது.