
திருவொற்றியூரில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவில் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள் காசிமேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து காசிமேடு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த கார்த்திக்(19), ஜோசப் என்கிற சூர்யா(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய 2 சிறுவர்கள் திருத்தணியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து திருத்தணி விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த 2 சிறுவர்களையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக பிடிபட்ட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்கள் இருவரையும் சீர்திருத்தப்பள்ளியிலும், கார்த்திக் மற்றும் ஜோசப் ஆகிய இருவரையும் புழல் சிறையிலும் அடைத்தனர்.