திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சி,100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர், திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847 ஆண்டில் முக்தி அடைந்தவர்.அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப்பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது,எனவே கர்நாடக இசைப்பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார். இதன் பொருட்டு தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாற்றில் ஸ்ரீதியாகபிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தியாகராஜரின் 176வது ஆராதனை விழா கடந்த 6 ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரியும் வெகு சிறப்பாக நடைபெற்றது, இந்நிலையில் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது, இதில் தமிழக கவர்னர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார்,புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையுடன்  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள்,வாத்தியக் கலைஞர்கள்,இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள். இவ்விழாவில் தியாக பிரம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனணி ஒ.எஸ்.அருண், ஏ.கே.பழனிவேல்  என ஏராளமானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி பாடினர், முன்னதாக தியாகராஜர் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனையும் காட்டப்பட்டது.