திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் – நிபுணர்கள் ஆய்வு

ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை கடல்நீர் உள்ளே புகுந்தது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி மாவட்டம், ஸ்ரீ ஹரி கோட்டா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கடல் பரப்பு சுமார் 250 அடியிலிருந்து 350 அடி வரை உள்நோக்கி வந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி புயல், சூறாவளி ஏற்படுவதாலும், கடல்மட்டம் அதிகரித்துள்ளது. இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) விண்கலம் ஏவும் இடமான சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மிக அருகே கடல் மட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் பதற்றம் அடைந்துள்ளனர்.

இதற்காக நஷ்ட நிவாரண நட வடிக்கைகளை இஸ்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆய்வு மையத்தின் (என்சிசிஆர்) உதவியுடன் கூட்டு நிவாரண திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கான மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், பணிகளை விரைந்து முடிப்பது என திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அருகே உள்ள இந்த தீவுப்பகுதியில் ஒருகி.மீ தொலைவிலேயே 2 ஆய்வுமையங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி புயல் அபாயம் ஏற்படுவதால், இங்குள்ள பல பாலங்கள் சேதமடைந்துள்ளன. 2020 நவம்பரில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் அலைகள் ஏற்பட்டன.

இதனால், மேற்கு கேடிஎல் பகுதியில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்தன. கடற்கரை சுமார் 150 அடி வரை முன்னோக்கி சென்றது. இதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் என்சிசிஆர் நிபுணர் குழுவினர் அடிக்கடி இப்பகுதிகளை ஆய்வு செய்தனர். இப்பகுதியில் உள்ள தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை வாயிலாகவும், மனித தவறுகளாலும் கடல் முன்னோக்கி சென்றதாக ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடல் முன்னோக்கி வருவதால், இப்பகுதியில் பராமரிப்பை அதிகரிக்க வேண்டுமெனவும், சில பாலங்கள், சாலைகளை அமைக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது.இந்த தீவுக்கு தெற்கே உள்ள சென்னையில் பெரிய துறைமுகம் இருப்பதால், அங்கு மிகப்பெரிய கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதாலும், கடல் முன்னோக்கி செல்வதற்கான காரணங்கள் என குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள வாக்காடு மண்டலத்தில் நவாப் பேட்டை, மொனப்பாளையம், கொண்டூரு பாளையம், ஸ்ரீநிவாச புரம், வட பாளையம், மஞ்சகுப்பம் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.