
திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு நேற்றிரவு 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்ற மகா கார்த்திகை தீப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை வகித்தார். தீப உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீபத் திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன. வேத பாடசாலையைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினர். தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீட்சிதர், கிருஷ்ண சேஷாசல தீட்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி ஸ்வாமிக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் பங்கேற்ற 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் ஸ்வாமிக்கு தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து எஸ்.வி., இசை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர்.