திருக்குறள் கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்:புதுக்கோட்டை உலகத் திருக்குறள் பேரவையில் தீர்மானம் .

புதுக்கோட்டை கீழ 4ஆம் வீதியிலுள்ள சரஸ்வதி இல்லத்தில் உலகத் திருக்குறள் பேரவை நிகழ்ச்சி அரங்க நிகழ்ச்சியாக நடந்தது. இந்நிகழ்வில் திருக்குறள் கருத்துக்களை பெரிய அளவுக்கு இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை திருக்குறள் பேரவை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு உலகத் திருக்குறள் பேரவையின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார் மாவட்ட நிர்வாகிகள் மெ.இராமச்சந்திரன், தனபதி, புண்ணிமூர்த்தி, சுப.ராதாபாய், இளைஞரணி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேக்கரி மஹராஜ் சீனு.சின்னப்பா குறிஞ்சி தங்கம் எழுதிய கறிவேப்பிலைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். மருத்துவர் ச.ராமதாஸ், மரு.டி.எஸ்.ராமமூர்த்தி, ம.தங்கராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர் பேராசிரியர் விஸ்வநாதன் நூலைப் பற்றிய விமர்சனத்தை விரிவாக வழங்கினார். நூலாசிரியர் குடும்பத்தினர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டு, ஏற்புரை வழங்கிப் பேசினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப் பித்தன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி இருவரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். திருக்குறள் பேரவையின் மாவட்டச் செயலராகப் பல்லாண்டுகள் பணி செய்து மறைந்த புலவர் தி.சு.மலையப்பன் அவர்களின் பெயரில் நடந்த அரங்கிற்கு அவரது மகன் முரளி மலையப்பன் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண்டு இன்றைய இளைஞர்களிடம் திருக்குறள் பரப்பும் பெரும் பணிகளுக்குத் தாம் உரிய உதவிகளைச் செய்து தரக் காத்திருப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் நடந்த “அழியாத் தமிழுக்கு அடையாளமாகத் திகழ்பவர் யார்?” எனும் இலக்கிய ஆய்வுப் பட்டி மன்றத்திற்கு கவிஞர் நா.முத்துநிலவன் நடுவர் பொறுப்பேற்று நடத்தினார். தொல்காப்பியரே என்று முனைவர் மு பாலசுப்பிரமணியனும், வள்ளுவரே என்று புலவர் கும.திருப்பதியும் கம்பரே என்று முனைவர் மகா சுந்தரும், பாரதியே என்று புலவர் இரா. நாகலட்சுயும் இலக்கிய ஆதாரங்களோடு வாதங்களை முன்வைத்தனர்.

கி.மு.ஆயிரத்தில் எழுதிய தொல்காப்பியரும், கி.மு முதல் நூற்றாண்டில் வந்த திருவள்ளுவரும், அவருக்கு அடுத்த ஆயிரம் ஆண்டில் பாடிய கம்பரும், அதன்பிறகு ஆயிரம் ஆண்டுக்கழித்து நம்காலத்தில் பாடிய பாரதியும் என ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுக் கால வித்தியாசத்தில் தோன்றியிருந்தாலும், அந்தந்த ஆயிரத்தாண்டின் அற்புதக் கவிகளாய்த் திகழ்ந்த நாற்பெரும் கவிஞர்களும் தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமைதரத்தக்க மகா கவிகளே என்றாலும், ஏற்கத்தக்க எளிய இன்றைய தேவைக்கான கருத்துக்களை தந்திருப்பதோடு, தன் பெயரில் தமிழர்களின் ஆண்டுக் கணக்கைத் தந்தும், தமிழர்களின் குடும்ப திருமணத்திற்கு இன்றும் படமாய்-பாடமாய் வந்து நிற்பவரும், உலகின் மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருப்பவரும் இன்றும் குழந்தைகள் முதல் ஆய்வாளர் வரை பேசப்படுபவருமனா திருக்குறள் தந்த திருவள்ளுவரே தமிழின் தமிழரின் அடையாளமாக திகழ்வதாக நடுவர் கவிஞர் நா.முத்துநிலவன் தனது நிறைவுரையில் தீர்ப்பளித்தார்.நிகழ்ச்சிகளை மகளிர் அணி அமைப்பாளர் சந்திரா ரவீந்திரன் தொகுத்து வழங்கினார். கலந்துகொண்ட அனைவர்க்கும் வாசலிலேயே சானிடைசர் வழங்கப்பட்டு, முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து சமுக இடைவெளியுடன் அமரச் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

திருக்குறள் கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் வகையில் பெரிய அளவிற்குத் திட்டமிடுவது என்று தீர்மானிக்கப் பட்டது.முன்னதாக திருக்குறள் பேரவையின் புதுக்கோட்ட மாவட்டச் செயலராகப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறுகதை எழுத்தாளர் சத்திய ராம் ராமுக்கண்ணு, வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கவிஞர் நிலவை பழனியப்பன் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறளிசைப் பா பாடி, நிறைவாக நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவெய்தியது.