
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் செல்வநாயகம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் செல்வநாயகம் தெரிவித்ததாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீல்சேர் வசதி செய்து தரப்படவில்லை. இங்கு பரிசோதித்து சான்றிதழ் வழங்க போதிய மருத்துவர்கள் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. கொரானா பரவலை தடுக்கும் வகையில் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில் ஆங்காங்கே இந்த முகாம்களை நடத்தினால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம். இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மொத்ததில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கிறது எனக்கூறியுள்ளார்.