தவறவிட்ட தாலி, பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த நேர்மையான விவசாயியால் திருமணம் நல்லபடியாக நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மாலையிடு பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி, 40. இவரது உறவினருக்கு நேற்று நச்சாந்து பட்டியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ரேணுகாதேவி ஏழு கிராம் தாலி, 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, தன் கைப்பையில் எடுத்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். மலையலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் உள்ள வேகத்தடையில் சென்றபோது, வேகத்தடையில் ஸ்கூட்டி ஏறி இறங்கியதில், தாலி, பணம் இருந்த கைப்பை கீழே விழுந்து விட்டது. இதை ரேணுகாதேவி கவனிக்காமல் சென்று விட்டார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கைப்பை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே, மலையலிங்புரத்தைச் சேர்ந்த விவசாயி திராவிடமணி, 46 என்பவர், அவ்வழியாக வந்த போது, கீழே கிடந்த கைப்பையை பார்த்துள்ளார். அதில் தாலி, பணம் இருந்ததால், திருமணத்துக்காக வாங்கிச் சென்றது தவறி விழுந்துள்ளது என்பதை புரிந்து கொண்டார். நமணசமுத்திரம் போலீசில் தெரிவித்து, பையை ஒப்படைத்தார்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் தான், கைப்பையை தவற விட்டிருக்க வேண்டும் என்று கருதினர். அதே வேளையில் சிவபுரம் பகுதியில், மூவர் சாலையோரம் பதற்றத்துடன் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தவறவிட்ட தாலி, பணம் அவர்களுடையது என, தெரியவந்தது.இதையடுத்து தாலி, பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனால் ரேணுகாதேவியின் உறவினர் திருமணம் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தது. இதையடுத்து போலீசாரும், திருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை பாராட்டினர்.