
தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தொடர்ந்து இன்றும் 3வது நாளாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியில் நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியின் பல பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.