தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம்: ரூ.1,000 வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். நேரில் கண்ட முதல்வர் மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் பார்வையிட்ட பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையை கடப்பதற்கு முன்பே வெள்ள நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிக்கை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க., செயலாளருமான நிவேதா முருகன் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத்தலைவர் ராஜேந்திரன், பேரூர் தி.மு.க., செயலாளர் முத்துராஜா, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சடகோபன் மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி தொகை வழங்கினர்.