தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  குடும்ப பிரச்சனை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள கூகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு குமார், விக்னேஷ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குமார் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவியுடன் குமாரின் சகோதரர் விக்னேஸ்வரனுக்கு தகாத உறவு ஏற்பட்டு அவரை அழைத்துக் கொண்டு திருப்பூரில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இதனை அறிந்த குமார்  இதுகுறித்து தட்டிக் கேட்டும் விக்னேஸ்வரன் கேட்காததால் இவர்களின் சித்தப்பா பாலையாவிடம் தெரிவித்து இதை தட்டிக் கேட்க கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பாலையா விக்னேஸ்வரனிடம் இதுகுறித்து கேட்டநிலையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இந்த தகராறில் விக்னேஸ்வரன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் இவர்களது உறவினரான கொடிவயல் கிழக்கு பகுதியைச் வீரமணி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து கடந்த 2020ம் ஆண்டு அரிவாள், ஈட்டி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பாலையாவை வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அப்துல் காதர் குற்றவாளிகள் மூன்று பேருக்கும்  இன்று ஆயுள் தண்டனையும் தல இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.